13 April 2016

தன்மானம் காத்த தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத அமைப் பாகும். சாதாரண பஞ்சாயத்து போர்டு தேர்தலிலிருந்து பாரளுமன்றத் தேர்தல் வரை எதிலும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை அது எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகின்றது.
ஆனால் அதே சமயம் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்து மாறி மாறி அதிமுக, திமுக என்று ஆதரவு தெரிவித்து வந்தது. தவ்ஹீத் கொள்கைக்குப் பாதகமும், பழுதும் வந்து விடக் கூடாதென்று தங்களைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வட்டங் களையும், வளையங்களையும் போட்டுக் கொண்டு களப் பணியும் ஆற்றியது.
1. ஆளுங்கட்சி அல்லது எதிர்க் கட்சிகளின் மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏறக் கூடாது.
2. அரசியல் கட்சியினர் யாரும் நமக்குப் பொன்னாடைகள் போர்த்தக் கூடாது; மலர் மாலைகள் அணிவிக்கக் கூடாது; நாமும் அரசியல் தலைவர் களுக்கு இவற்றை அணிவிக்கக் கூடாது.
3. அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வரும் போது மரியாதைக் காக எழுந்து நிற்கக் கூடாது.
4. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் தங்கள் செலவில் நமக்கு மேடைகள் அமைத்துத் தர வேண்டும். அந்த மேடையில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்கலாம்.
5. தேர்தல் பிரச்சாரத்திற்கான போக்குவரத்து, விளம்பரங்கள் போன்ற அனைத்துச் செலவுகளையும் அரசியல் கட்சிகளே செய்ய வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து செலவுக்குப் பணம் தருகின்ற பட்சத்தில் செலவு போக மீதப் பணத்தை அந்தக் கட்சி வேட்பாளர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.
6. தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சியினருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
7. உள்ளூர் பகுதியில் வேட்பாளர் களிடம் வாங்கிய பணத்திற்கு முறையான கணக்கு வழக்குகளை தலைமைக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு எடுக்கப்படும்.
இதுபோன்ற எண்ணற்ற பாதுகாப்பு வட்டங்களும் வளையங்களும் ஏன்? எதற்கு?
அரசியல்வாதிகளிடம் வார்த்தைக்கு வார்த்தை வணக்கம் என்பது சர்வ சாதாரணமாக மூச்சுக்கு முன்னூறு தடவை வரும். அவர்களை அறியாமலேயே கைகள் யாரைக் கண்டாலும் கும்பிடு போட்டுத் தொழும். தனி மனித புகழ், துதி பாடல் கொடி கட்டிப் பறக்கும். மொத்தத்தில் அரசியல்வாதிகளை ஷிர்க் எனும் இணை வைப்பு ஆக்கிரமித்து நிற்கும்.
இதுபோன்ற கட்டத்தில் தவ்ஹீது வாதி இந்த இணைவைப்பில் விழுந்து விட்டால் கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாகி விடும். அதாவது ஏகத்துவம் என்ற உயிரினும் மேலான கொள்கையை, கண்ட கிரயத்திற்கு விற்று விட்டு இட ஒதுக்கீட்டை வாங்குகின்ற கதையாகி விடும். அதனால் தான் இத்தனை தடுப்புச் சுவர்கள்! தடை அரண்கள்!
அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். ஒரு சிலரைத் தவிர மீதி ஜமாஅத் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி, செலவு செய்த மிச்ச மீதப் பணத்தை வேட்பாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதைப் பார்த்த வேட்பாளர்கள், "இந்தக் காலத்தில் இப்படி நாணயத்திற்கும் நம்பிக்கைக் கும் உரியவர்கள் இருக்கின்றார்களா?'' என்று வினாக்குறிகளுடன் விழிப் புருவங்களை உயர்த்தி வியப்பில் உறைந்து போயினர்.
இவ்வளவுக்குப் பிறகும் "தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' என்று நம்முடைய நாணயத்தை எதிரிகள் கொச்சைப் படுத்தினர்.
ஹஜ் சர்வீஸ், வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகின்ற ஏஜண்ட் தொழில்,
ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவை ஹலாலான தொழில்கள் தான் என்றாலும் அவற்றில் ஏமாற்று வேலைகள், வாக்குறுதிக்கு மாற்றமான செயல்பாடுகள், பொருளாதார மோசடிகள் உள்ளே நுழைந்து சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை யும் நாணயத்தையும் தாக்கி தகர்த்து நிர்மூலமாக்கி விடுகின்றன. எனவே ஜமாஅத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகள் இவற்றைச் செய்யக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியது.  ஐயத்திற்கும், அச்சத்திற்கும் இடமளிக் கின்ற அத்தனை வாசல்களையும் தவ்ஹீது ஜமாஅத் அடைத்து விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் அந்த நம்பிக்கையிலும், நாணயத்திலும் அந்த வகையில் அறவே குறை காண முடியாத அளவுக்கு அப்படியே வாயடைத்துப் போன எதிரிகள், திறந்து கிடக்கின்ற, ஐயத்திற்கு இடமளிக்கின்ற தேர்தல் ஆதரவு என்ற வாசல் வழியாக வந்து தங்களது தாக்குதல் களைத் தொடுத்தனர்.
இதற்கும் தவ்ஹீத் ஜமாஅத் தனக்கே உரிய தனி பாணியில் எதிரிகள் தலை தூக்க முடியாத அளவிற்கு, தலை தெறிக்க ஓடும் அளவிற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தது.
எனினும் ஏகத்துவக்கொள்கையைச் சொல்கின்ற நம்மீது எள்ளளவு கூட குறைச் சொல்ல முடியாத அளவுக்கு ஐயத்திற்கும் அச்சத்திற்கும் உரிய அத்தனை வாசல்களையும் அடைத்த நாம் இந்த வாசலை மட்டும் ஏன் தாழிடாமல் திறந்து வைக்க வேண்டும்? என்று யோசித்து ஆய்வு செய்து கடந்த பொதுக் குழுவில் அந்த வாசலையும் ஓட்டை உடைசல் இல்லாமல் தவ்ஹீது ஜமாஅத் அடைத்து விட்டது.
அரைக்க அரைக்க சந்தனம் மணப்பது போல் இந்த வகையில் தவ்ஹீது ஜமாஅத், வளர வளர அதன் தூய்மை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. அல்லாஹ் இந்த இயக்கத்தினரை நேர்வழியின் பால் நடத்திக் கொண்டு செல்கின்றான். இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.
நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்கு கிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.
அல்குர்ஆன் 19:76
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்.
அல்குர்ஆன் 47:17
பொருளாதார ரீதியில் மட்டு மல்லாமல், ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது வேறு சில பாதிப்புகளும் ஏற்பட்டன. சில முடிவுகளை நாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எடுப்போமே அம்மாதிரி எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் போது திமுக அபிமானிகளாலும், திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் போது அதிமுக அபிமானிகளாலும் இவர் வெற்றி பெற்ற பிறகு பிஜேபியுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி அதிகமாகக் கிளப்பி விடப்பட்டது. இதற்கு நம்மால் உத்தரவாதம் கொடுக்க முடியாமல் ஆனது.
இப்போதைய நிலையைத் தான் பார்க்க முடியும். நாளை நடப்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நாம் சொன்னாலும் இது நமது ஜமாஅத்திற்குரிய நேர்த்திமிக்க நெத்தியடிப் பதிலாக இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையை நாம் சந்திக்க நேர்ந்தது. இப்போது அது மாதிரியான நெருக்கடி நீங்கி, அதன் கண்ணியம் காக்கப்பட்டு விட்டது.
இப்போது தேர்தல் காலம். இன்றைக்கு நமது ஜமாஅத்தின் அழைப்புப் பணி தேர்தல் களத்தை விட சூடாக நடந்து கொண்டிருக் கின்றது. அழைப்புப் பணிக்கு கோடை காலம், மழை காலம் என்ற பாகுபாடு கிடையாது. அது போல் அதற்குத் தேர்தல் காலம் தேர்தல் அல்லாத காலம் என்ற பாகுபாடும் கிடையாது. காரணம் இது மக்களின் உயிர் காக்கும் பணியாகும். மக்களை நரகத்திலிருந்து மீட்கின்ற காக்கின்ற அவசியமான அவசரமான உன்னதப் பணியாகும்.
உயர்ந்த அந்த அழைப்புப் பணியை தேர்தல் காலத்திலும் நாம் செய்யாமல் இருந்தில்லை. எனினும் தேர்தல் அல்லாத காலத்தை விட அது சதவிகிதத்தில் மிகவும் பலமடங்கு குறைவானது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
இதற்குக் காரணம், தேர்தல் காலத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகள் களப்பணியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நமது ஜமாஅத்தின் உறுப்பினர்கள் கட்சிக்காரர்களை மிஞ்சி களப்பணி ஆற்ற ஆரம்பித்து விடுவார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல் பணி களைகட்டவும் அனல் பறக்கவும் துவங்கி விடும். நம்முடைய முழு சக்தியும் தேர்தல் களத்தை நோக்கியே திருப்பி விடப்பட்டு விடும் நிலை இருந்தது.
இப்போது அதையெல்லாம் எண்ணிப் பார்த்து வேதனை அடைகின்றோம். நம்முடைய முழு ஆற்றலையும் இந்த அழைப்பு பணிக்கு செலவிடத் தவறி விட்டோமே என்று நாம் வருத்தப் படுகின்றோம். இந்த அரசியல் கட்சிக்காரர்களுக்கு கொடுத்த ஆதரவு காரணமாக நாம் சந்தித்த அடிதடி சண்டைகளுக்கான வழக்குகள் இன்று வரை நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. வாரம் தவறாமல் நீதிமன்ற வாய்தாவுக்கு சென்று கால் கடுக்க நின்று காலத்தையும், காசு பணத்தையும் செலவழித்து விட்டுத் திரும்பி வருகின்ற நம் கொள்கைச் சகோதரர்கள், இந்த வழக்கை ஏகத்துவக் கொள்கைக்காக வேண்டி சந்தித்திருந்தால் மனம் ஆறுதலாக இருந்திருக்கும் என்று ஆதங்கப் படக்கூடிய நிலையை நாம் பார்க்கின்றோம். அந்த அளவுக்கு தேர்தல் ஆதரவு நம்முடைய உழைப்பை உறிஞ்சி இழுத்து விட்டது.
இந்தத் தேர்தலில் அல்லாஹ் வுடைய அருளால் நமது மொத்த உழைப்பையும் அழைப்பு பணியிலேயே திருப்பி விட்டோம். தேர்தல் காலத்தில் இதற்கு முந்தைய தேர்தல் காலம் போல் அல்லாமல் அழைப்புப் பணியின் பக்கம் திரும்பியது நமக்குப் பெரிய ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும், நிறைவாகவும் இருக்கின்றது.
குறிப்பாக, ஏகத்துவக் கொள்கை எங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்ற சொல்லி முதுகில் குத்திய துரோக அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த இழிவுகளைப் பார்த்த பிறகு, அல்லாஹ் நமது ஜமாஅத்திற்கு வழங்கியுள்ள கண்ணியத்திற்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
தேர்தலில் ஒரு சில சீட்டுகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகி விடலாம். ஆனால் அதற்காக அவர்கள் படுகின்ற கேவலத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஐந்து வருடம் அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டு, சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யாமல் ஜெயலலிதாவைப் புகழ்வது மட்டுமே குறிக்கோள் என்று செயல்பட்ட அவர்கள் தற்போது அதிமுகவின் கதவுகள் திறக்கப்படாத நிலையில் திமுகவின் பக்கம் தாவியுள்ளனர்.
ஊடகங்ளிலும் சமூக வலைத் தளங்களிலும் மமகவின் பச்சோந்தித் தனத்தை வறுத்தெடுக்கின்றனர்.
"இவ்வளவு நாளும் அதிமுகவை ஆதரித்து விட்டு, இந்த நான்கைந்து நாட்களுக்குள் திமுகவுக்கு மாறி விட்டீர்களே! இந்த இடைவெளியில் எந்த வகையில் அதிமுக உங்கள் கொள்கைகளுக்கு மாற்றமாக நடந்து விட்டது? திமுக உங்கள் கொள்கை எதனை ஏற்றுக் கொண்டுவிட்டது? அதிமுக கூட்டணி தான் எங்களை சிறப்பாக நடத்தியது என்று ஜவாஹிருல்லா சொல்லியிருக்கிறார். நீங்கள் தற்போது எடுத்திருக்கும் முடிவுக்குப் பின்னால் இருப்பது கட்சி நலனா? நாட்டு நலனா?
இஸ்லாமியர்களின் நலன் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால், "திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளாலும் சமுதாயத்திற்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை, அதனால் இரண்டு கட்சிக்கும் ஆதரவில்லை'' என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக் கிறதே! அந்த முடிவையாவது நீங்கள் எடுத்திருக்க வேண்டும். கடைசிப் பத்து நாளில் இந்த மாற்றமெல்லாம் நடக்கிறது என்றால் வெறும் பதவி, தொகுதி, அதிகாரம் இது தான் உங்கள் குறிக்கோளா? அதிகாரம் உள்ள கட்சியோடு தான் நாங்கள் ஒட்டிக் கொண்டிருப்போம் என்று இதை எளிதாகச் சொல்லலாமே!'' என்று மமக நிர்வாகியைப் பார்த்து நியூஸ்-7 தொலைக்காட்சியின் நெறியாளர் கேட்கிறார். அதற்கு அந்த மமக நிர்வாகி, அது வந்து, அது வந்து, அதாவது என்று திணறுவதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
அதே நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் அவர்கள், "கடலூருக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகளை எல்லாம் கேட்ட பிறகு, எங்கள் ஊருக்கும் புயல் வந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று மக்கள் நினைக்கிறார்கள்' என்று ஜவாஹிருல்லா சொன்னார். இது அதீதமில்லையா? நிவாரண உதவிக்காக மக்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று கூறலாமா? வெறும் தேர்தல் கூட்டணிக் காக ஒரு கட்சியின் தலைவர் இப்படிச் சொல்கிறார் எனும் போது உண்மையிலேயே மனது வேதனைப் படுகிறது'' என்று கேட்டார். இதற்கும் மேற்படி மமக நிர்வாகியால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை.
ஆக, பதவி ஒன்று தான் தங்களது குறிக்கோள் என்பதை பட்டவர்த் தனமாக அறிவித்து, அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத் துரோகிகளின் நிலையைப் பார்க்கும் போது, மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள 19:76 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று, இந்த இழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றி நேர்வழியை அதிகப்படுத்தியுள்ள அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

No comments:

Post a Comment